ஆப்நகரம்

பின்வாங்கிய ஒன்றிய அரசு... 'டெல்டாக்காரர்' முதல்வருக்கு கிடைத்த வெற்றி.! - உதயநிதி

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய திய அரசு அறிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று உதயநிதி பெருமிதம்

Samayam Tamil 8 Apr 2023, 3:39 pm
மத்திய அரசால் நிலக்கரி சுரங்கங்களுக்காக நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 இடங்களில் தமிழகத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் அடங்கியுள்ளன. மேற்கண்ட மூன்று பகுதிகளும் டெல்டா மாவட்டங்களுக்கு உட்பட்டதால் அங்கு நிலக்கரி சுரங்கங்களை அமைக்க முடியாது. ஒருவேளை அமைக்கப்பட்டால் அது வேளாண்மைக்கு தீங்குவிளைவிக்கும் என்று சுட்டிக்காட்டிய தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
Samayam Tamil udhayanithi


நாம் தமிழர் சீமான், பாமக அன்புமணி ஆகியோர் அறிக்கைவிட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது. எனவே, வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தில் இருந்து இருந்து விலக்கிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

விலக்கு

இந்த நிலையில் காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முழுக்க முழுக்க முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று
அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் போட்டுள்ளார்.

உதயநிதி ட்வீட்

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. விவசாயம் காப்போம்'' என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் இந்த ட்வீட்டுக்கு ஏற்கனவே நிலக்கரி சுரங்க விவகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

டெல்டாக்காரன்

முன்னதாக தமிழக சட்டசபையில் ஒன்றிய அரசின் நிலக்கரி சுரங்க ஏலம் குறித்து விவாதம் எழுந்தது. அப்போது பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசின் அறிவிப்பை பார்த்து நானும் உங்களை போல அதிர்ச்சி அடைந்தேன். உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பினேன். நானும் டெல்டாக்காரன்தான் ஒருபோதும் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கமாட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி