ஆப்நகரம்

வங்கிகளில் நகைக்கடன் ரத்து; விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என்று அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியால் பொது மக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Samayam Tamil 14 Jul 2020, 7:27 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிரது. இதனால், பொருளாதாரம் இழந்து தவிக்கும் பொது மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கொண்டு நகைக்கடன் பெற்று வாழ்வாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளார் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (சட்டம் மற்று பயிற்சி) குறுஞ்செய்தி ஒன்றை அனைத்து மாவட்ட மண்டல இணை பதிவாளருக்கு அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள 23 மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 128 மத்திய கூட்டுறவு வங்கி, 4,250 நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மறு உத்தரவு வரும் வரை நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதற்கான காரணாம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காரணமே சொல்லாமல் வந்த இந்த உத்தரவிற்கு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளார்களிடம் தகுந்த பதிலை கூற முடியாமல் போக வாய்ப்புள்ளதால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு..!

இதனிடையே, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டுமல்ல தனி நபர் கடன், வீட்டு கடன், பணி செய்யும் பெண்களுக்கான கடன், சிறுபான்மையினருக்கான கடன் இப்படி எந்த கடனையும் தற்போதைக்கு வழங்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாகவும், கடன் வழங்கும் இணையதள சர்வர்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்


இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு. கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அதேபோல், “கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும். எனவே, இப்படியோர் உத்தரவு பிறப்பித்திருந்தால், பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி