ஆப்நகரம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு!

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 12:33 pm
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil cats
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு!


தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே கள்ளிவயல் தோட்டத்தைச் சார்ந்த செய்புல்லா, என்பவரது நாட்டுப் படகை நாகை தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாராயணன் (45) வாடகைக்கு எடுத்தார்.

இந்த படகில் நாராயணன், அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி (45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன்(50) ஆகிய 4 பேர் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல் கள்ளிவயல் தோட்டத்தை சேர்ந்த அப்துல்வகாப் (50) என்பவரது நாட்டுப்படகை தரங்கம்பாடியை சேர்ந்த மாதேஷ் (19) வாடகைக்கு எடுத்து அந்த படகில் மாதேஷ், பிரவீண்குமார் (30), பாலகிருஷ்ணன் (45) ஆகிய 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் அனைவரும் கடந்த திங்கள் கிழமை இரவு, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி, தமிழக மீனவர்களையும். அவர்களின் இரண்டு நாட்டுப்படகுகளையும் சிறைப்பிடித்தனர்.

பின்னர் கைது செய்த மீனவர்கள் மீது, இலங்கை அரசின் புதிய சட்டத்தின் கீழ் எல்லை தாண்டும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்த்தில் உள்ள மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்கள் மீது இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடித்தல் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘நாகை மீனவர்கள் 7 பேரும் 7 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்து விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதிக்குள் படகு உரிமையாளர் ஆவணங்களை தாக்கல் செய்து படகுகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதி தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலமாகவிசைப்படகு மீனவர்களைக் குறிவைத்து சிறைப்பிடித்து வந்த இலங்கை கடற்படையினர், தற்போது நாட்டுப்படகு மீனவர்களையும் சிறைப் பிடித்திருப்பது தமிழக மீனவர் களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

அடுத்த செய்தி