ஆப்நகரம்

தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்: கூட்டத்தொடருக்கு இதெல்லாம் கட்டாயம்!

விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை அடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் வைரஸ் பரிசோதனை தொடங்கியுள்ளது.

Samayam Tamil 11 Sep 2020, 12:11 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது தலைமைச் செயலகத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கில் போதிய சரீர இடைவெளி விட்டு அமரும் வகையில் வரும் 14ஆம் தேதி முதல் கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சபாநாயகர் தனபால், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil Coronavirus Test


அதில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று முதல் எம்.எல்.ஏக்கள் வசிக்கும் இல்லங்களுக்கே சென்று சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.

மேலும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வருகை தரும் சட்டமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான நெகடிவ் சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும்.

துரைமுருகன் - கே.சி.வீரமணி: நண்பேன்டா கெமிஸ்ட்ரி!

சட்டமன்ற செயலகம் வழங்கும் அனுமதிச்சீட்டு வைத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டும் தான் கூட்டத்தொடர் நடைபெறும் மூன்றாவது தளத்தில் அனுமதிக்கப்படுவர் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை தொடங்கியுள்ளது.

இதையொட்டி சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களின் குடியிருப்பு வளாகத்திலும், சட்டமன்ற செயலக வளாகத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 14ஆம் தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்தொடரை குறைந்தபட்சம் 7 நாட்களாவது நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தி இருந்தார். அப்போது தான் தமிழகப் பிரச்சினைகள் குறித்து பேச நேரம் கிடைக்கும் என்று வலியுறுத்தினார்.

அடுத்த செய்தி