ஆப்நகரம்

தர்பார் படத்தை கேபிள் டீ.வி.யில் ரிலீஸ் செய்த உள்ளூர் சேனல்... ரஜினி மன்றம் புகார்...

ரஜினியின் படத்தை தோற்கடிப்பதாக நினைத்து ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ரஜினியின் எதிர்பாளர்கள் இறங்கி இருப்பது கண்டிக்க தக்கது

Samayam Tamil 14 Jan 2020, 8:47 am
பொங்கலுக்கு பிரபல தொலைக்காட்சிகள் பலவும், புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ள நிலையில், பொங்கலுக்கு முன்பே தர்பார் திரைப்படத்தை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்ப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil darbar


மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ரஜினியின் தர்பார் படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதாக புகார் எழுந்துள்ளது.

ரஜினியின் நடித்து ஜனவரி மாதம் 9ஆம் தேதி, வெளியான தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டது.

தமிழ் ராக்கர்ஸில் இருந்து தர்பார் படத்தை பதிவிறக்கம் செய்த யாரோ ஒருவர் 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் ஆப்பில் முழு திரைப் படத்தையும் பரப்பினார்.

இத்துடன், தர்பாரின் வசூலை அடித்து நொறுக்குவோம் என்ற ஆடியோவுடன் இந்த தர்பார் படத்தின் முழு வீடியோவும் பரப்பப்ட்டதால் தமிழ்த் திரை உலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் சரண்யா டிவி என்ற உள்ளூர் தொலைக் காட்சியில் ரஜினியின் தர்பார் திரைப்படம் சட்ட விரோதமாக ஒளிப்பரப்ப பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சரண்யா தொலைக்காட்சி உரிமையாளர் மீது ரஜினி மக்கள் மன்றத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை பொறுத்துக் கொள்ள இயலாத குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள், ரஜினியை வைத்து பல கோடிகளை கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூக வலைதளங்களில் தர்பாருக்கு எதிராக அவதூறு பரப்பி வந்த நிலையில், முழுபடத்தை வாட்ஸ் ஆப்பில் பரப்பி வருவதாகவும், அவர்களது தூண்டுதலின் பேரில் தற்போது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ளூர் காவல்துறையில் மட்டுமல்ல சிபிசிஐடி காவல்துறையிலும் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவிற்கு என்று தனியாக அதிகாரிகளும் காவலர்களும் பணியில் உள்ள நிலையில் தமிழகத்தில் பகிரங்கமாக தர்பார் படத்தை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று சட்டவிரோதமாக ஒளிபரப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் படத்தை தோற்கடிப்பதாக நினைத்து ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ரஜினியின் எதிர்பாளர்கள் இறங்கி இருப்பது கண்டிக்க தக்கது என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருட்டு விசிடி ஒழிப்பு சாத்தியமானதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்பம் பெருமளவு வளர்ந்து சட்டவிரோதப் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் இன்றைய சூழலில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் தனிமனித ஒழுக்கமும் இன்றியமையாதது என்கின்றனர் திரைத்துறை ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி