ஆப்நகரம்

சுபஸ்ரீ விவகாரம் :இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை ஓகே.... பேனர் வைத்த கவுன்சிலரை எப்போ கைது பண்ணுவீங்க?

சென்னையில் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2019, 4:29 pm
சென்னை கோவிலம்பாக்கத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழா கடந்த செப்டம்பர் 12 -ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
Samayam Tamil ssc


அவர்களை வரவேற்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் விளம்பர பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளிக்கரணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது.

அதில் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தமிழக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இச்சம்பவத்தை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில், சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான சட்டவிரோத பேனர்களை அகற்றாததையடுத்து, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காவல் இணை ஆணையர் மகேஸ்வரி இன்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்த விசாரணையின் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படவோ, பணியிடை நீக்கமோ செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

அடுத்த செய்தி