ஆப்நகரம்

கொரோனா: தமிழ்நாடு சமூக பரவலை எட்டிவிட்டதா?

தமிழ்நாட்டில் கொரோனா சமூக பரவல் என்ற நிலையை எட்டிவிட்டதா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

Samayam Tamil 14 Apr 2020, 11:01 am
தமிழ்நாட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னரே ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்தது. இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Samayam Tamil தமிழ்நாடு சமூக பரவலை எட்டிவிட்டதா


இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. நேற்று நிலவரப்படி 1,173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இரண்டு பேர், 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர் ஒருவர், 50 முதல் 60 வயதுக்குட்பட்டோர் 6 பேர், 45 வயது நபர்கள் 2 பேர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 96 வயது முதியவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பும், தடுப்பு நடவடிக்கைகளும்!

தமிழ்நாட்டில் 58 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில், வீட்டு கண்காணிப்பில் 33 ஆயிரத்து 850 பேரும், அரசு கண்காணிப்பில் 136 பேர் உள்ளனர். 63 ஆயிரத்து 380 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் சமூகப் பரவல் என்ற மூன்றாம் நிலையை எட்டவில்லை என்று கூறப்பட்டாலும் உயிரிழந்த 11 பேரில் ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 57 வயது பெண் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா எப்படி வந்தது என்பது உறுதிசெய்யப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இவர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் செல்லாதவர்கள், குடும்ப உறுப்பினர்களும் அத்தகைய பயணம் மேற்கொள்ளாதவர்கள் எனவே தமிழ்நாட்டில் சமூக பரவல் என்ற நிலையை எட்டிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொரோனா: தமிழ்நாட்டில் நிலைமை மோசமடைகிறதா?

நீரிழிவு நோய் உள்ளிட்ட பிற நோய்களால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள்தான் கொரோனாவால் உயிரிழக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் உயிரிழக்கும் பலருக்கும் உடலில் வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன.

புளியந்தோப்பைச் சேர்ந்த 45 வயது பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் இல்லை. கொரோனா தொற்று நுரையீரலை மிக விரைவாக பாதிப்புக்கு உள்ளாக்கியதால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி