ஆப்நகரம்

கம்பீரமான பேச்சை மீண்டும் கேட்க முடியுமா? விஜயகாந்த் குரலை கேட்க காத்திருக்கும் தொண்டர்கள்!

உடல்நலக்குறைவால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் கம்பீரமான குரல் மீண்டும் ஒலிக்குமா என்ற ஆர்வத்தில் தேமுதிக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

Samayam Tamil 13 Mar 2019, 10:13 am
கடந்த 2005ஆம் ஆண்டு 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர் விஜயகாந்த். தாங்கள் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் தனித்து செயல்பட்டு, ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர். குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதமும் கிடைத்தது. இதனால் தமிழக அரசியலில் தேமுதிக முக்கியத்துவம் பெற்றது.
Samayam Tamil DMDK


இதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் பெரிதாக வெற்றி கிட்டவில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சியாக உருப்பெற்றனர். ஆனால் அதன்பிறகு அக்கட்சியின் செல்வாக்கு, வாக்கு சதவிகிதம் குறைய ஆரம்பித்தது. இதற்கு விஜய்காந்தின் உடல்நல பாதிப்பும் ஒருகாரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தற்போது தீவிர ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம், அதிமுக உடன் கூட்டணி ஒப்பந்தம் ஆகியவற்றில் விஜயகாந்தைக் காண முடிந்தது. அதாவது, அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கொஞ்சமும் தெரியவில்லை.

பார்வையில் கோளாறு, நடக்க முடியாத நிலை, பேசுவதில் பிரச்சனை இருப்பதைக் காண முடிகிறது. அருகில் உள்ளவர்கள் கூறுவதை மட்டுமே அவர் உணர்ந்து கொள்கிறார். இது தேமுதிக தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கம்பீரமான பேச்சையும், நடையையும் காண முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக பிரேமலதா கூறி வருவது, அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கவுள்ளதால், அதில் விஜயகாந்த் எவ்வாறு கலந்து கொள்வார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை பிரச்சாரங்களில் கலந்து கொள்ளவில்லை எனில், அது அக்கட்சி பெறும் வாக்குகளை பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு, இன்று நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் விஜயகாந்த், இன்றாவது மவுனம் கலைப்பாரா என்று அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி