ஆப்நகரம்

மதுபோதை...வயதான தம்பதி மீது தாக்குதல்... சூப்பர் மார்க்கெட்டில் திமுக பிரமுகர் அடாவடி!!

சூப்பர் மார்க்கெட்டில் வயதான தம்பதியை, மதுபோதையில் திமுக பிரமுகர் தாக்கியுள்ள சம்பவம், சென்னை மாதவரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Oct 2019, 9:40 pm

சென்னை மாதாவரம் பகுதியில் வசித்து வருபவர் தசரதன். திமுகவில் 32 -வது வட்ட துணை செயலாளராக உள்ளார்.

மாதவரம் பகுதியில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களை இவர் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரெட்டை ஏரி லட்சுமிபுரம் - வில்லிவாக்கம் சாலையில் ஸ்ரீவாரி என்ற சூப்பர் மார்க்கெட் கடந்த மாதம் 15 -ஆம் தேதி திறக்கப்பட்டது.

ஆயுத பூஜை அன்று அங்கு சென்ற தசரதன், "தன்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி கடையை திறந்தாய், தனக்கு கொடுக்க வேண்டியதை கொடு" என கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

சூப்பர் மார்க்கெட் நிர்வாகிக்கும், தசரதனுக்கும் இடையே தகராறு தொடர்வதை கண்ட, அக்கடையின் அருகே வசித்து வந்த முதியவர் முத்துவும், அவரது மனைவியும் தகராறை தடுக்க முயன்றனர்.

அப்பொழுது அந்த வயதான தம்பதியை தசரதன் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், எட்டியும் உதைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் ச த்தமிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தசரதனை மடக்கி பிடித்தனர். மேலும் புழல் காவல் நிலையத்தில் அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. தசரதன் முதியவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைராலாகி வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது மசாஜ் சென்டரில் பெண்ணை தாக்குவது, உணவகத்தில் தாக்குதல் நடத்துவது என அடாவடிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருவது அக்கட்சியினருக்கு மக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது.

இவற்றின் தொடர்ச்சியாக, 11 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, எஸ்.எஸ்.பாண்டியன் என்ற திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

தற்போத தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என சூப்பர் மார்க்கெட்டில் மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்டதுடன் வயதான தம்பதியை திமுக பிரமுகரான தசரதன் தாக்கியுள்ளார். கட்சி பிரமுகர்களின் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள், திமுக மீது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.

அடுத்த செய்தி