ஆப்நகரம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: விரைவில் விசாரிக்க திமுக உச்சநீதிமன்றத்தில் மனு!

ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரிக்க திமுக சார்பில் முக ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Samayam Tamil 11 Feb 2019, 1:36 pm
ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விரைவில் விசாரிக்க திமுக சார்பில் முக ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil OPS


தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும்,ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. இதற்கிடையில், சசிகலா முதல்வராக பொறுப்பேற்க முயற்சித்தார். ஆனால், அது முடியாமல் போகவே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இதையடுத்து, அப்போது சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். எனினும், அந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்றார்.

இதையடுத்து எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மற்றும் அமமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனினும், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை இந்த வாரத்திற்குள் நடத்தப்படும் என்று நீதிபதி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி