ஆப்நகரம்

செய்தியாளரை தாக்கிய நபர் திமுக கிடையாது: ஆர்.எஸ் பாரதி விளக்கம்

சென்னையில் செய்தியாளரை தாக்கிய வாலிபர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.

Samayam Tamil 3 Dec 2018, 10:16 pm
சென்னையில் செய்தியாளரை தாக்கிய வாலிபர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது: ‘இன்று (3-12-2018) சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் போது சுரேஷ்பாபு என்பவர் அங்குள்ள டீக்கடையில் தாக்குதல் நடத்தி அதை படமெடுக்கப்போன தொலைக்காட்சி நிருபரை தாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
Samayam Tamil rs bharathi


ஊடகத்தில், சுரேஷ் பாபு என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் என்று செய்யப்படும் பிரச்சாரத்தில் துளியும் உண்மை இல்லை. அவர் கழகத்தின் உறுப்பினரும் இல்லை – அவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராகூட இல்லாத ஒருவரின் வன்முறைக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு, அவர் திமுகவை சேர்ந்தவர் என்று பொய்யாக ஊடகங்களில் செய்தி பரப்புவது மிகவும் வேதனைக்குரியது. இது போன்ற செய்திகளை திட்டமிட்டு திமுகவிற்கு எதிராக பரப்புவர்கள் குறைந்தபட்சம் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தீர விசாரித்து செய்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தாக்குதலில் ஈடுபட்ட சுரேஷ் பாபு மீது தயவு தாட்சண்யமின்றி காவல்துறை நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன்பு அவரை நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று கேட்டு கொள்ளும் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவரை திமுகவை சேர்ந்தவர் போல் உருவகப்படுத்தி கழகத்திற்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்று உள்நோக்கத்துடன் நடத்தப்படும் பிரச்சாரங்களை ஊடகங்களும் செய்தி பத்திரிகைகளும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி