ஆப்நகரம்

அடிமையின் ஆட்சியில் திருந்தாத போலீஸ்: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை என்பதை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் நிரூபித்துள்ளனர் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 23 Jun 2020, 7:03 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து இருப்பதாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்றா தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்துறையினர், அவர்கள் இருவரையும் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்


அதன்பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் போலீசார் அடைத்த நிலையில், பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவர் மரணத்திற்கும் சாத்தான் குளம் போலீசார்தான் காரணம் என்றும், இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

போலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!

அந்த வகையில், “அப்பாவிகளான சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் இருவரும் நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். போலீஸ் சித்ரவதையே காரணம் என்கிறார்கள். ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை’ என மீண்டும் நிரூபித்துள்ளது அம்மாவட்ட காவல்துறை” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “நீதிமன்றத்தை, பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசியவர்கள், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்.. இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பீர்கள். எளிய மனிதர்களை காக்கியை காட்டி மிரட்டி லத்தியை உயர்த்துவீர்கள். அடிமையிடம் அதிகாரம் சிக்கினால் இப்படித்தான் ஆகும்” என்றும் சாடியுள்ளார்.


முன்னதாக, இந்த விவகாரம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா என்று கேள்வி எழுப்பியதுடன் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்கு பதிலளிக்க வேண்டும். உரிய நீதியும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி