ஆப்நகரம்

அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்

Samayam Tamil 20 May 2020, 4:36 pm
தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil udhayanidhi stalin
அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு


எனினும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இல்லை என்ற நிலையில் வரும் வரை மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறப்பு?

எனினும், ஜூன் 15ஆம் தேதிக்குள் கொரோனா முற்றிலும் குணமாகிவிடும் என கருத முடியாது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா பாதிப்பு முழுவதுமாக நீங்கிய பின்னரே நடத்த வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி மனு அளித்தார். இந்த சந்திப்பின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், தாயகம் கவி ஆகியோர் உடனிருந்தனர்.


அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். கல்வி முக்கியம். அதைப்போலத்தான் மாணவர்களின் உயிரும் முக்கியம். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்றார்.

முன்னதாக, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இதுதொடர்பாக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் காணொளிக் காட்சி மூலமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி