ஆப்நகரம்

எடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி: பாஜகவின் அஜண்டா என்ன?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தள்ளி போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Samayam Tamil 14 Jan 2021, 5:32 pm
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக வருகிற 18ஆம் தேதி டெல்லி செல்வதாக அறிவிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பதற்காக முதல்வர் பழனிசாமி டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும், சசிகலா இன்னும் சில நாட்களில் விடுதலையாகவுள்ள நிலையிலும் முதல்வர் பழனிசாமியின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சசிகலாவின் விடுதலையை தள்ளிப் போடுவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் டெல்லி சென்று திரும்பினார்.

அதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் சசிகலா கண்டிப்பாக விடுதலையாகி விடுவார் என்று அமமுகவினர் அடித்துக் கூறுகின்றனர். ரஜினி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவை பலப்படுத்தும் நோக்கில் பாஜக இறங்கியுள்ளது. அதன் பின்னணியிலேயே முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம் இறுதி செய்யும் என்று முரணான கருத்துகளை தமிழக பாஜகவினர் கூறிவந்ததற்கிடையே, அதிமுகவே முடிவு செய்யும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நம்ம ஊரு பொங்கலுக்கு ஏன் வருகிறார் ஜே.பி.நட்டா?

அதேசமயம், அமமுக தனித்து களம் காணும் பட்சத்தில் அதிமுகவின் வாக்குகள் சரியவும் வாய்ப்புகள் இருப்பதாக பாஜக வட்டாரத்தில் கணிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ற வகையில், அக்கட்சி காய்களை நகர்த்தி வருகிறது. மேலும், உளவுத்துறையை கொண்டு அமமுகவினர் மூலமாக சசிகலா வரவேற்பு தொடர்பான தகவல்களை கேட்டு பெறும் பாஜக அவருக்கிருக்கும் செல்வாக்கை கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அமைந்துள்ளது. அவரது இந்த பயணத்தின் போது கூட்டணி விஷயங்கள் பேசப்பட்டாலும், சசிகலா விடுதலை தொடர்பான முக்கிய விஷயங்களே பேசப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறும் அரசியல் விவரம் அறிந்தவர்கள், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் அதே நாளில் பாஜவின் தூதுவர் ஒருவர் சிறை சென்று சசிகலாவை சந்திக்கவிருப்பதாகவும் கூறுகிறார்கள். அப்போது சில விஷயங்கள் பேசி இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

இதையெல்லாம் பார்த்தால் சசிகலா விடுதலைக்கு பிறகான அரசியலை தீர்மனிக்கும் முக்கிய இடத்தில் டெல்லி பாஜக மேலிடம் இருப்பதாக அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்தற்கிடையே, பாஜக, அதிமுக, அமமுகவை ஒன்றிணைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரவில் விடுதலையாகும் சசிகலா சென்னைக்கு வரும் பாதை இதுதான்!

இது ஒருபுறமிருக்க, எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவரது விமான டிக்கெட் இன்னும் முன்பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அலுவகத்தில் இருந்து இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, முதல்வரின் பயணம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ளார். இங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து ஆய்வு செய்யும் அவர், டெல்லி சென்ற பின்னரே எடப்பாடி பழனிசாமிக்கான அப்பாயின்ட்மென்ட் உறுதியாகும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி