ஆப்நகரம்

மலேசியாவில் கி.வீரமணி நிகழ்ச்சி திடீர் ரத்து... இதுதான் காரணமாம்!!

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, மலேசியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 22 Nov 2019, 11:57 pm
மலேசிய -இந்திய பாரம்பரியக் குழுவின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நடிகர் சத்யராஜ் நடித்திருந்த 'பெரியார்' திரைப்படத்தை திரையிடுவதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.
Samayam Tamil kv


அந்த படத்தை திரையிடுவதற்கு முன்பாக, 'பெரியாரின் மலேசிய பயணமும் அதன் தாக்கமும்' என்ற தலைப்பில் கி.வீரமணி உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்து மதம் குறித்தும், இந்துக் கடவுள்கள் குறித்தும் கடந்த காலங்களில் கி.வீரமணி மோசமாக விமர்சித்துள்ளார்; சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடிய அவரை மலேசியாவில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என, அந்த நாட்டில் உள்ள ஹிந்து அமைப்புகளின் ஒரு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இந்த விவகாரத்தை, மலேசிய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக கி.வீரமணி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு, அந் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம் மலேசிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

Honest Driver : உலகத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... நம்புங்கள்...!

இதுகுறித்து, மலேசிய - இந்திய பாரம்பரியக் குழுவின் தலைவர் பிரபாகரன் நாயர் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நீண்டகால தொடர்புகள் உள்ளன. இதுதொடர்பான ஏராளமான வரலாற்றுப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அத்தகைய தகவல்களைப் பெற வேண்டும், ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

மேலும், தந்தை பெரியாரின் "மலேசியப் பயணமும், அதன் மூலம் மலேசிய வாழ் இந்தியர்களிடம் ஏற்பட்ட தாக்கமும்" குறித்து உரையாற்றவே கி.வீரமணியை அழைத்திருந்தோம்.

ஆனால், நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமலேயே சிலர் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வீண் சர்ச்சைகளை தவிர்க்கும் பொருட்டு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யாரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கருத்துக்களை பதிவிட்டது என் கவனத்துக்கும் வந்தது என்றார் அவர்.

அடுத்த செய்தி