ஆப்நகரம்

செந்தில் பாலாஜி - சிறை வரை நீளும் சிக்கல்: அண்ணாமலை கொடுத்த ஹிண்ட்: அன்பில் மகேஷுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

செந்தில் பாலஜியை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமலாக்கத்துறை சோதனை விரைவில் நடைபெற உள்ளதாக சொல்கிறார்கள்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 30 May 2023, 8:21 am
செந்தில் பாலாஜி வசம் உள்ள இலாக்காவை மாற்றி விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க திமுக மேலிடம் தயாராகி வருகிறது. அதே சமயம் தனது ஆதரவாளருக்கே ‘பசை’ உள்ள துறை செல்ல வேண்டும் என்று உதயநிதி நினைக்கிறாராம்.
Samayam Tamil enforcement directorate will soon target senthil balaji and chances to go to prohibition dept anbil mahesh sources said
செந்தில் பாலாஜி - சிறை வரை நீளும் சிக்கல்: அண்ணாமலை கொடுத்த ஹிண்ட்: அன்பில் மகேஷுக்கு அடிக்கும் ஜாக்பாட்!


பிடிஆர்: மலிவான அரசியலில் பலிகொடுக்கப்பட்டது யார்?

தமிழ்நாடு அரசு ஓரிரு மாதங்களாக அடுத்து முக்கிய பிரச்சினைகளில் மாட்டி திணறி வருகிறது. பிடிஆர் ஆடியோ விவகாரம் எழுந்து திமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. மலிவான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை என்று கடந்து செல்வதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதித்துறையை மாற்றி அவருக்கு தகவல் தொழில் நுட்பத் துறையை கொடுத்தார்.

கள்ளச்சாராயம் விவகாரம்!

பிடிஆரின் துறையை மாற்றி அந்த குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உண்மை இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஸ்டாலினே உருவாக்கினார். அதுமட்டுமல்லாமல் ஆரம்பம் முதலே பிடிஆரை எதிர்த்து வந்த பாஜக அவரது துறை மாற்றத்தை உள்ளூர ரசித்தது. பிடிஆர் பிரச்சினை அடங்குவதற்குள் கள்ளச்சாராய மரண விவகாரம் தமிழக அரசுக்கு தலை குனிவை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கி மேலும் விமர்சனங்களை சம்பாதித்தார் ஸ்டாலின்.

செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்!

அத்துடன் மதுவிலக்கு துறை உறங்குகிறதா என்று செந்தில் பாலாஜியை நோக்கியும் கேள்விகள் எழத் தொடங்கின. கோடையில் ஆங்காங்கே ஏற்படும் மின் வெட்டு பிரச்சினை, கள்ளச்சாராய விவகாரம் என செந்தில் பாலாஜிக்கு இரு பக்கமும் அடி விழுந்து வந்த நிலையில் மூன்றாவதாக வருமான வரித்துறை அவரை குறிவைக்கும் விதமாக அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனையை நடத்தி வருகிறது.

ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்

ஜப்பான் பயணத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உடனுக்குடன் ரிப்போர்டாக அனுப்பப்படுகின்றன. மேலும் உளவுத்துறை மூலம் ரகசிய ரிப்போர்ட் ஒன்றும் சென்றுள்ளதாக சொல்கிறார்கள். செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடைபெறவில்லையே தவிர அவரை தகுந்த ஆதாரங்களுடன் மடக்குவதற்காகவே அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் விரிவான சோதனை நடைபெறுகிறதாம்.

அண்ணாமலை கொடுத்த ஹிண்ட்!

பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “சிறைக்கு அனுப்பக் கூடிய அதிகாரம் வருமான வரித்துறைக்கு இல்லை. அந்த அமைப்பு முறைகேடாக வந்த சொத்துக்களை கண்டுபிடித்து அதன் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஆனால் அமலாக்கத்துறையை பொறுத்தவரை தண்டனை மற்றும் கைது செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

வருமான வரித்துறை முன்னே, அமலாக்கத்துறை பின்னே!

செந்தில் பாலாஜியை குறிவைத்து நடைபெறும் இந்த ஐடி ரெய்டு அடுத்ததாக நடைபெற உள்ள அமலாக்கத்துறை ரெய்டுக்கான டிரெய்லர் என்பது தான் உளவுத்துறை ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள சேதி என்கிறார்கள். இதனால் கட்டாயம் திமுக அரசுக்கு நெருக்கடி உருவாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் செந்தில் பாலாஜியை மக்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசிய ஸ்டாலின் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகும் வகையில் நடவடிக்கை இருக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

மதுவிலக்கு: விலக்கி வைக்கப்படும் செந்தில் பாலாஜி?

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்று கூறி சமூகவலைதளங்களில் ‘பத்து ரூபாய் பாலாஜி’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். வருமான வரித்துறையும் இந்த மதுவிலக்கு துறையை மட்டுமே இப்போது அதிகமாக மோப்பம் பிடித்துள்ளதாக சொல்கிறார்கள். எனவே ஸ்டாலின் வெளிநாட்டிலிருந்து வந்த கையோடு செந்தில் பாலாஜியிடமிருந்து மதுவிலக்கு துறையை எடுக்கப்போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.

அன்பில் மகேஷுக்கு ஜாக்பாட்

செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதியின் ஆதரவாளராகவே அறியப்படுகிறார். பசையுள்ள ஒரு துறையிலிருந்து அவரது ஆதரவாளரை மாற்றும் போது தனது மற்றொரு ஆதரவாளரிடம் அந்த துறை இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையை கவனித்து வரும் அன்பில் மகேஷிடம் மதுவிலக்குத் துறையை வழங்கலாம் என்ற பேச்சு மேல் மட்டத்தில் அடிபடுகிறதாம். சித்தரஞ்சன் சாலையின் ஆசீர்வாதம் அன்பில் மகேஷுக்கு நிறைவாக இருக்கும் நிலையில் அவரைத் தவிர வேறொருவர் அந்த துறையை கைப்பற்ற முடியாது என்கிறார்கள்.

எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி