ஆப்நகரம்

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி.. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் - ஈபிஎஸ்

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி ட்வீட்.

Samayam Tamil 14 May 2023, 1:29 pm
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர் குப்பம் என்கிற கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இவர்களில் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil eps


இதில், சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மரக்காணம் காவல்துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளியான அமரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எதிர்வினையாற்றியுள்ளார். அதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகின்றன.

மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன், சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி