ஆப்நகரம்

தனியார் மருத்துவமனை சீல் அகற்றம்: நீதிமன்றம் உத்தரவு!

ஈரோடு கரு முட்டை விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jul 2022, 2:13 pm
சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு சுதா மருத்துவமனையின் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கும் அறைக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Madras high court


ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பல முறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள சுதா என்ற தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். அத்துடன் மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க கூடாது எனவும், சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை 15 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டதுடன், கருத்தரித்தல் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனை தரப்பில், மருத்துவமனையில் புதிய நோயாளிகளை சேர்க்க கூடாது எனவும், சிகிச்சை பெறும் நோயாளிகளை 15 நாளில் டிஸ்சார்ஜ் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி உரிய காரணங்களை தெரிவிக்காமல் மருத்துவ கருவிகள் சீல் வைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
Eps Delhi Visit ஓபிஎஸ்ஸை முந்தி டெல்லி செல்லும் எடப்பாடி: ஒரு வாரம் காத்திருக்க முடியாது!
இதனால் மருத்துவ தொழிலை மேற்கொள்ள முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

தமிழக சுகாதார துறை தரப்பில், விதிகளை மீறி செயல்பட்ட மருத்துவமனை மீது பொது நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சட்டத்தில் அதற்கு இடமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பினால் அதற்குள் அவர்கள் ஆதாரங்களை அழித்து விடக் கூடும் என்பதால் நோட்டீஸ் கொடுக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து ஒன்பது முறை கரு முட்டை எடுக்கப்பட்டதாகவும், சிறுமியின் வயதை 27 என மாற்றி மோசடி செய்ததாகவும், அச்சிறுமியின் ஆதார் அட்டையை போலியாக தயாரித்துள்ளதாகவும், இது விதிமீறல் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 35 ஆண்டுகளாக செயல்படும் மருத்துவமனை மீது முந்தைய காலத்தில் எந்த புகாரும் இல்லை எனவும், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதாக திருப்தி அடைந்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.,
AIADMK head office எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக அலுவலகம்: சீல் அகற்றம்!
மேலும், மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை தெரிவிக்கப்பட வில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளுக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி