ஆப்நகரம்

பாஜகவின் கொத்தடிமை தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் – ராஜகண்ணப்பன் ஆவேசம்

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தங்களது சுய நலத்திற்காக பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன் குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 18 Mar 2019, 6:45 pm
வருகின்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சா் ராஜகண்ணப்பன், திமுக தலைவா் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தொிவித்தாா்.
Samayam Tamil Rajakannappan


கடந்த 1991-96ம் ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் ராஜகண்ணப்பன். பின்னா் அதிமுகவில் இருந்து விலகி மக்கள் தமிழ்தேசம் என்ற புதிய கட்சியை தொடங்கினாா். சிறிது காலம் திமுகவுக்கு ஆதரவு தொிவித்த நிலையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவினாா்.

இந்நிலையில் வருகின்ற மக்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கோரப்பட்டதாகவும், அதற்கு கட்சியின் தலைமை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாத விரக்தியில் ராஜகண்ணப்பன் திமுக கூட்டணிக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தாா்.

அதன்படி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தொிவித்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவின் கொத்தடிமைகளாக ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனா்.

கடந்த இடைத்தோ்தலில் நோட்டாவைக் காட்டிலும் குறைவான வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது எதற்காக? பன்னீா்செல்வமும், பழனிசாமியும் தங்களது சுயலாபத்திற்காக கட்சியை சீரழித்து வருகின்றனா். சுயலாபத்திற்காக செயல்படும் பன்னீா்செல்வத்தையும், பழனிசாமியையும் கொத்தடிமைகள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது?

பன்னீா்செல்வமும், பழனிசாமியும் ஆளுமையற்றவா்களாக உள்ளனா். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகம் உள்ளது. குறிப்பாக பன்னீா்செல்வம், பழனிசாமி இடையே இது அதிகமாக உள்ளது. தங்கமணியும், வேலுமணியும் தான் கட்சியின் பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

திராவிட இயக்கங்களின் ராஜ்ஜியமாக திகழ்வது தென்மாவட்டங்கள். ஆனால், தென் மாவட்டத்தின் பல தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. அதிமுகவில் ஒரு கிறிஸ்தரோ, ஒரு இஸ்லமியரோ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதனால் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி