ஆப்நகரம்

போலி பாஸ்போர்டிற்கு உங்க ஒரிஜினல் ஆவணங்களை இப்படித்தான் எடுக்கிறாங்க - விசாரணையில் அதிர்ச்சி!

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் 13 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TIMESOFINDIA.COM 12 May 2019, 2:44 pm
தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலரும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil Arrest


இதற்காக இண்டர்நெட் சென்டர், ஜெராக்ஸ் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் மோசடி கும்பல் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களுக்கு பணம் கொடுத்து, உண்மையான ஆவணங்களின் பிரதிகளை வாங்கியுள்ளனர்.

அதில் மாற்றம் செய்து, தேவைப்படும் நபர்களுக்கு ஏற்ப போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்றுள்ளனர். இதற்காக தமிழக அளவில் பெரிய நெட்வொர்க்கே வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்த திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி(48)யை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 12 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதில் சமயபுரம், கும்பகோணம், மன்னார்குடி, புதுக்கோட்டை, சென்னையின் ராயபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தக் கும்பல் போலி பாஸ்போர்ட் வாங்கும் தமிழர்களிடம் ரூ.5,000ம், இலங்கை மக்களிடம் ரூ.50,000ம் வசூல் செய்துள்ளனர். 13 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றவர்களை தேடும் பணியில் க்யூ பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி