ஆப்நகரம்

சாலையில் நின்ற லாரியில் இருந்து கரும்புகளை எடுத்து சாப்பிட்ட காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் வனப்பகுதி அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்த கரும்புகளை காட்டு யானை ஒன்று சாப்பிட்டது.

Samayam Tamil 24 Jun 2019, 12:16 pm
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நிலையில் அங்கு வந்த காட்டு யானை ஒன்று லாரியில் இருந்த கரும்புகளை எடுத்து சாப்பிட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதி வழியாக பெங்களூரு, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு முக்கியமான போக்குவரத்து வழித்தடமாகும்.

இந்த ஆசனூர் வனப் பகுதியில் பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்த சில நாட்களாக யானைகள் தனியாகவும், கூட்டம் கூட்டமாக கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு கரும்பு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது.

பழுதாகி நின்ற லாரியில் கரும்பு இருப்பதை அறிந்த ஒற்றை யானை கரும்பினை சாப்பிடுவதற்காக தேசிய நெடுஞ்சாலையை வந்தடைந்தது. பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை தனக்கு மிகவும் பிடித்த கரும்பை சாப்பிடும் ஆர்வத்தில் எந்த வாகனங்களுக்கும் வழிவிடவில்லை.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் பெங்களூரு, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் கரும்பினை சாப்பிட்ட ஒற்றை யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்து தனக்கு மிகவும் பிடித்த கரும்பினை சாப்பிட்ட ஒற்றை யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி