ஆப்நகரம்

இன்று 5ஆம் ஆண்டு நினைவு தினம் - ஏவுகணை நாயகனுக்கு அப்படியென்ன சிறப்பு?

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Samayam Tamil 27 Jul 2020, 11:48 am
அப்துல்கலாம் என்ற வார்த்தையை சொன்னால் இன்றும் கூட இளைஞர்களின் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். கனவு காணுங்கள். லட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்கள். வல்லரசிற்காக கடுமையாக உழையுங்கள் என்று பலவாறு உத்வேகம் ஊட்டியவர். பிறருக்கு கற்றுத் தருவதிலே பேரார்வம் கொண்டு ஏராளமான மாணவர்களை சந்தித்து வழிகாட்டி இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இதே நாளில் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து தனது இன்னுயிரை நீத்தார்.
Samayam Tamil APJ Abdul Kalam


ராமேஸ்வரத்தில் சாதாரண படகோட்டியின் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உச்சத்திற்கு உயர்ந்தவர் ஏபிஜே அப்துல்கலாம். பேராசிரியர், விஞ்ஞானி, பிரதமரின் அறிவியல் ஆலோசகர், குழந்தைகளின் நண்பன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என பன்முகத்தன்மை கொண்டவராக பலவாறு புகழப்பட்டவர். இந்தியாவின் வல்லரசு கனவை இளைஞர்களின் மனதில் விதைத்தவர்.

மக்களே உஷார், சென்னை, திருச்சி வரிசையில் விருதுநகர்!

வருங்கால சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வழிகாட்டுதல்களை அள்ளித் தந்தவர். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாக பலர் இருந்திருந்தாலும் அப்துல்கலாம் தான் அதிகம் நினைவுக்கு வரக்கூடியவர். நாடு முழுவதும் இளைஞர்களை எழுச்சி பெறச் செய்யும் வகையில் ஏராளமான பயணங்களை மேற்கொண்டு அறிவியலையும், புதிய இந்தியாவையும் வளர்த்தெடுக்கப் பாடுபட்டவர்.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அக்னி ஏவுகணை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றில் ஆச்சரியங்களை நிகழ்த்தி புகழ் மழையில் நனைந்தவர். இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ உள்ளிட்டவற்றில் முக்கிய பதவிகளை வகித்தவர். பாரத் ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன், ராமானுஜன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

"ஊரடங்கை நீட்டிக்கலாமா" மோடி, முதல்வர்களுடன் டிஸ்கசன்!

இளைஞர்களை உறங்கவிடாமல் துடிப்போடு இருக்கச் செய்யும் வகையில் அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இன்று அவரது 5ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி பலரும் அஞ்சலி செலுத்த விரும்பினாலும் கொரோனா ஊரடங்கு அனைவரையும் கட்டிப் போட்டு வைத்துள்ளது. இருப்பினும் அவரது குடும்பத்தார் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் ராமேஸ்வரத்தின் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி