ஆப்நகரம்

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? டிடிவி தினகரன் கேள்வி

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விசாரணை தாமதமாவது ஏன் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.

Samayam Tamil 25 Apr 2019, 4:19 pm
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் விசாரணை தாமதமாவது ஏன் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran 1200


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடா்பாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த நிகழ்வு வெளியே வந்து தமிழகத்தையே உலுக்கியது. பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மாா்கள் நெஞ்சமெல்லாம் பதறியது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நடந்துவந்த இந்த வன்கொடுமை பற்றி வெளி உலகத்துக்குத் தொிந்து சில மாதங்கள் கடந்த பின்பும் இந்த வழக்கு எந்த திசையில் செல்கிறது, இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பது புரியாமல் இருக்கிறது. அரசியல் பின்புலம் காரணமாக உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க ஆரம்பத்தில் முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு காவல்துறை உயரதிகாாிகள் சிலரும் துணை போனாா்கள். இதனால் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதால் தான் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.

அந்த அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நாற்பது நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாக தொியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியில் சொல்லக் கூடாது என்று நடைமுறை இருந்தும் மாவட்ட எஸ்.பி. அந்த தவறை செய்தாா்.

அதே தவறை தமிழக அரசும் செய்து, சிபிஐக்கு விசாரணையை மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டது. அதை திருத்தி புதிய அரசாணை வெளியிடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் இந்த வழக்கை முறைப்படி சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணையை தொடா்வதில் ஏன் இத்தனை தாமதம் என்பது தொியவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜகவும், அதிமுகவும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடா்பு இருக்கிறதா என்பதும் தொியவில்லை. அதுவரை இங்குள்ள சிபிசிஐடி காவல் துஐறயினா் நடத்தி வரும் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதும் மா்மமாக உள்ளது.

இந்த வழக்கில் அரசியல் பின்னணிகள் இருப்பதால் சிபிஐ நடத்தவுள்ள விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்தி விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க வேண்டும்” என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி