ஆப்நகரம்

தமிழகத்தில் விரைவில் கவர்னர் ஆட்சி? பாஜக பெண் நிர்வாகி ட்வீட்!

தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சி வரப்போகிறதென்று பாஜக பெண் நிர்வாகி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 6 Nov 2020, 6:47 pm
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது. இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மாறி, மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
Samayam Tamil தேசிய மகளிரணி தலைவர் வானதியுடன் ரஞ்சனா நாச்சியார்
தேசிய மகளிரணி தலைவர் வானதியுடன் ரஞ்சனா நாச்சியார்


அதேபோல், எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முதல்வர் பழனிசாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது. மும்மொழிக் கொள்கை, பெரியார் சிலை மீது காவி பூசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளை அக்கட்சி மேலிடம் ரசிக்கவில்லை என தெரிகிறது. எனவே, அதற்கு தகுந்த வகையில் அக்கட்சி காய்களை நகர்த்தி வருகிறது.

இதனிடையே, பாஜக - அதிமுக இடையேயான மோதலுக்கு வலு சேர்க்கும் பொருட்டு தற்போது வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பட்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு: என்ன பேசினார்?

இந்த சூழலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு ஆளுநர் புறப்பட்டு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து டெல்லி பாஜக மேலிடத்திடம் ஆளுநர் விளக்கியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த நிலையில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சனா நாச்சியார் என்பவர் தமிழகத்தில் விரைவில் ஆளுநர் ஆட்சி வரப்போகிறதென்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கவர்னர் ஆட்சி வரப்போகுது உங்களோட கருத்துக்களை பகிரவும்” என்று ரஞ்சனா நாச்சியார் பதிவிட்டுள்ளார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரின் இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி