ஆப்நகரம்

Sedition case: ஜெயிலா? நாடாளுமன்றமா? தன் கையை வைத்து, தானே குத்திக் கொள்வாரா வைகோ!

வைகோவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அவரது ராஜ்ய சபா கனவு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 2 Jul 2019, 3:31 pm
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்ய சபா எம்.பிக்களுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக வசம் தலா 6 சீட்கள் கைவசம் இருக்கின்றன.
Samayam Tamil Vaiko


முன்னதாக மக்களவை தேர்தலின் போது போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின் படி, மதிமுகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக திமுக உறுதியளித்தது. அதன்படி, மீதமுள்ள இரு சீட்களையும் தங்கள் கட்சியினருக்கு திமுக வழங்கியது.

இந்த சூழலில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு ராஜ்ய சபா சீட்டில் போட்டியிட வைகோவை ஒருமனதாக முடிவு எடுத்தனர்.

அதன்படி, 15 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக வைகோ மீதான வழக்கு ஒன்றின் தீர்ப்பு வந்து நிற்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் - திமுகவிற்கு எதிராகவும் பேசினார்.

அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. இதைக் காரணம் காட்டி, இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியிருப்பதாக கூறி, திமுக ஆட்சியில் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய வைகோ நீண்ட காலமாக போராடி வந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, விசாரணையை தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் தீர்ப்பு வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வழக்கில் இருந்து வைகோ விடுதலை ஆகிவிட்டால், ராஜ்ய சபா எம்.பி ஆவதில் எந்த பிரச்னையும் இல்லை.

ஒருவேளை 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில் முடிந்தது கதை. வைகோவின் எம்.பி கனவு பறிபோய் விடும். எனவே ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் வரும் 5ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

அடுத்த செய்தி