ஆப்நகரம்

20 ஆண்டுகளில் எத்தனை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி விட்டீர்கள்: ப.சிதம்பரம் கேள்வி

எத்தனை முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினீர்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 25 Sep 2018, 1:26 pm
கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை முறை பாகிஸ்தானின் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினீர்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil p chidambaram


கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய ராணுவம், எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கே சென்று பயங்கராவாதிகள் தங்கியிருந்த முகாம்களை அதிரடியாக தாக்கியது. இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சுமார் 70 பயங்கரவாதிகள் வரையில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பாஜக அரசு அடிக்கடி மார்தட்டி வருகிறது.

இதனிடையே பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதாக இருந்தால், அதில், விமானப்படையும் பங்கேற்கும் என்றும் இதன் மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தையும் தகர்க்க முடியும் என்றும் இந்திய விமானப்படை தளபதி தனோவா கூறியிருந்தார். மேலும், விரைவில் மற்றொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தேவை உள்ளது என்றும் ராணுவ தளபதி நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ராணுவ தளபதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக விரைவில் மற்றொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த தேவை இருக்கிறது என்று ராணுவ தளபதி கூறியுள்ளார். நல்லது. அவர் நன்றாக கணித்துள்ளார். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை முறை எல்லை தாண்டிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்று கூற முடியுமா?’ இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி