ஆப்நகரம்

IT Raid: கையில் கொண்டு செல்லப்பட்ட பை.. பெண் அதிகாரியை சுற்றி வளைத்து சோதனை செய்த திமுகவினர்!

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டு சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 26 May 2023, 11:53 am
Samayam Tamil Incometax Raid

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். இதனை அறிந்த திமுகவினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெண் அதிகாரி காரில் இருந்து ஒரு பையுடன் அசோக்கின் வீட்டிற்கு சென்றார்.
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களா? அப்பட்டமான அதிகார அத்துமீறல்... அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
இதனை பார்த்த திமுகவினர் பையில் எதையோ கொண்டு போய் அசோக் வீட்டில் வைக்க போகிறார்கள் என எண்ணி பெண் அதிகாரியை சுற்றி வளைத்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஐடி கார்டை காட்டுங்கள் என்றும் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். பெண் அதிகாரி அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போதும் அவர்கள் விடாமல் விரட்டி விரட்டி பைகளை சோதனை செய்ததால் கடுப்பான அந்த அதிகாரி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் அதிகாரியிடம், சோதனை செய்ய வந்தால் சோதனை மட்டும் செய்யுங்கள் எங்கள் மேல் எப்படி கை வைக்கலாம் என மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பூட்டியிருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை செய்யாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டனர். அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதம் செய்து அவர்களை சோதனை செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமுல் வந்தாலும் ஆவின் அதனை சமாளிக்கும்... அமைச்சர் மனோ தங்கராஜ் பளீச்!
வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல்துறையிடம் பாதுகாப்பு பெற்றுதான் சோதனைக்கு செல்வார்கள். ஆனால் இம்முறை மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்காமலேயே சோதனைக்கு சென்றுள்ளனர். அசோக் வீட்டில் சோதனை நடத்த முடியாமல் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி