ஆப்நகரம்

சனாதன தர்மத்தின் வலிமை: ஆர்.என்.ரவி பேச்சு!

இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் போன்று ஆன்மீக வளர்ச்சியும் அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 Jun 2022, 3:28 pm
Samayam Tamil ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவது அவ்வப்போது சர்ச்சையாகிறது. புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழக அரசு தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பாஜகவின் சித்தாந்தங்களை தனது பேச்சின் மூலம் அவர் பொதுவெளியில் கொண்டு செல்கிறார் என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்.” என்றார்.

இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த ஆர்.என்.ரவி, ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆள்கிறது என்றார்.

சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கியதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது என்றும் பேசினார்.
தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டியிருக்கும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
தமிழகத்தில் சனாதன தர்மத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் பேசி வரும் நிலையில், ஆளுநரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மண்ணில் சனாதன உணர்வை வளர்த்து, மத உணர்வைத் தூண்டி, மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி