ஆப்நகரம்

பாஜகவுக்கு தாவுகிறாரா அதிமுக எக்ஸ் மினிஸ்டர்? டெல்லிக்கு டிக்கெட் போட்டாச்சா?

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஜகவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 13 Dec 2022, 2:14 pm
அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டிருக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில் விரைவில் பொதுச் செயலாளராக வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார். ஓ.பன்னீர் செல்வமோ நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறிவருகிறார். டெல்லி யாரை ஆதரிக்கிறதோ அவர்களுக்கே வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
Samayam Tamil bjp aiadmk


ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக்கு எடப்பாடி பழனிசாமியை அழைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் வருத்தத்தை அளித்தது. இந்நிலையில் குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்வுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஓபிஎஸ் கலந்து கொண்ட நிலையில் இபிஎஸ் புறக்கணித்தார்.

காவி துண்டு சகிதம் பாஜகவினர் போலவே காட்சியளித்த ஓபிஎஸ் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். அமித் ஷாவையும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி பதவியேற்பு: களத்தில் இறங்கிய துர்கா.. அமைச்சர்களுக்கு என்ன பதற்றம்?
தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே தங்களது கட்சியில் இணைக்கும் வேலையை பாஜக பல மாநிலங்களில் செய்துவருகிறது. அந்த வகையில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளை வளைக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அதிமுக முழுவதுமாக எடுத்திருந்தது. அப்போதிருந்த அமைச்சர்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது பேசிவந்தனர். ஆனால் ராஜேந்திர பாலாஜி மட்டும் ஆர்.எஸ்.எஸ்.காரர் போல் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். “தமிழ்நாடு ஆன்மீக பூமி, இங்கு ஆன்மீக ஆட்சி நடைபெறுகிறது, மோடி எங்கள் டாடி” என அவர் அப்போது பேசியெதல்லாம் வைரல் ஆனது.

வழக்கு, விசாரணை, நிபந்தனை ஜாமீன் என மாவட்ட எல்லையை தாண்டாமல் இருந்த ராஜேந்திர பாலாஜி தற்போது டெல்லி பறக்க உள்ளதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில். பாஜகவில் முக்கிய பதவி ஒன்று அவருக்கு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் தென் மாவட்டங்களில் பாஜகவை வலுவாக கால் ஊண்றச் செய்யலாம் என்றும் பேச்சு நிலவுகிறது.
நகர்ப்புற உட்கட்டமைப்பில் ஜெர்மன் வங்கி நிதியுதவி: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்!
“அதிமுகவின் தலைமை பதவிக்கு குறிவைத்துள்ள ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பாஜகவின் ஆதரவுக்குத்தான் காத்திருக்கிறார்கள். அதனால் அண்ணன் நேரடியாக பாஜகவுக்கே போய்விட திட்டமிட்டுள்ளார்” என்று கூறுகிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தில்.

இது குறித்து விளக்கம் அளிக்க ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டு பேசினோம். “பாஜகவினருடன் பேசுவதால் மட்டுமே நான் அந்தக் கட்சிக்கு செல்வதாக சொல்லக்கூடாது. நான் அண்ணா திமுகவில் தான் இருக்கிறேன். இதற்கு முன் வழக்கறிஞரை சந்திக்க டெல்லி சென்ற போதும் இதேபோல் கூறினர். என்னை சுற்றியுள்ளவர்கள் ஏதேனும் கூறியிருப்பார்கள். அதில் உண்மையில்லை” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி