ஆப்நகரம்

திருவள்ளுவர் சிலை விவகாரம்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

உத்திரகாண்ட் மாநிலத்தில் கேட்பாரற்று கிடக்கும் திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ அம்மாநில முதல்வரை அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

TNN 20 Jul 2016, 3:59 pm
உத்திரகாண்ட் மாநிலத்தில் கேட்பாரற்று கிடக்கும் திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ அம்மாநில முதல்வரை அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil jayalalitha urged modi to take action in thiruvalluvar statue issue
திருவள்ளுவர் சிலை விவகாரம்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்


திருவள்ளுவர் சிலை தொடர்பாக வெளியாகும் தொலைக்காட்சிகளின் வெளியாகும் செய்திப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தமிழக முனிவர் திருவள்ளுவரின் சிலையை நிறுவ எழுந்துள்ள எதிர்பாராத சர்ச்சையில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.. மாநிலங்களவை எம்பியான தருண் விஜய், ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முடிவெடுத்து அதற்காக நிதியும் சேகரித்தார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கும்.

இதற்காக கடந்த மாதம் 18-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர்- கங்கை பயணம் என்ற பெயரிலான நிகழ்ச்சியை மாநிலங்களவை எம்பி தருண் விஜய் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த பயணம் சென்னை வந்தடைந்ததும், இங்கிருந்து 22-ம் தேதி ஆளுநர் கே.ரோசய்யா பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் இருவர் பங்கேற்றனர்.

திருக்குறளில் கூறப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவது தொடர்பான செய்திகளை வட இந்திய மக்கள் அறியச் செய்வதே இந்த பயணத்தின் நோக்கமாகும். உத்தரகாண்ட் மாநிலம் ஹர் கி பவுரியில் நிறுவப்பட இருந்த திருவள்ளுவர் சிலை, அங்குள்ளவர்களின் போராட்டம் காரணமாக, ஹரித்வாரின் சங்கராச்சார்யா சவுக் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி நிறுவப்பட்டு 29-ம் தேதி அம்மாநில ஆளுநர் மற்றும் முதல்வரால் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது திருவள்ளுவர் சிலை ஹரித்வாரில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.திருவள்ளுவர் சிலை தொடர்பாக தொலைக்காட்சிகளின் வெளியாகும் செய்திப்படங்கள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உத்தரகாண்ட் அரசுடன் பேசி, திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தப்படுமேயானால், வட இந்தியாவில் புனித தலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவும் திட்டத்தின் நோக்கம் நிறைவடையாது.

எனவே, இந்த பிரச்சனைக்கு தாங்கள் முன்னுரிமை அளித்து, உத்தரகாண்ட் அரசுடன் பேசி விரைவில் தீர்வு காண வேண்டும்.”
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி