ஆப்நகரம்

‘நமக்கு நாமே’ பயணத்தின் முன்னோடி ஜெயலலிதா

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணத்திற்கு முன்னோடியாக விளங்குபவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தான்.

TNN 6 Dec 2016, 4:03 pm
2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ‘நமக்கு நாமே’ பயணத்திற்கு முன்னோடியாக விளங்குபவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தான்.
Samayam Tamil jayalalithaa pioneer of modern election campaign
‘நமக்கு நாமே’ பயணத்தின் முன்னோடி ஜெயலலிதா


1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். சிறுநீரகக்கோளாறு மற்றும் பக்கவாத்தால பாதிக்கப்பட்டபோது, அதிமுகவின் பல மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக ஒன்று திரண்டனர். நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் போன்ற சிலரைத் தவிர வேறு யாரும் எம்.ஜி.ஆரை அணுக அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, ஜெயலலிதா எம்.ஜி.ஆரைப் பார்க்க நெருங்கவே முடியாமல் புறக்கணிக்கப்படார்.

அந்நிலையில் தான் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அதன் பிறகு, ஜெயலலிதாவை கட்சியிலிருந்து முற்றிலும் ஓரங்கட்டிவிடும் முயற்சியை ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாள்கள் மும்மரமாக்கினர். அப்போது, நாடாளுமன்றத்திற்கும் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஜெயலலிதா எதிர்ப்பாளர்கள் இந்தத் தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யமாட்டார் என்று பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர். ஆனால், ஜெயலலிதா அதுபற்றி கண்டுகொள்ளவில்லை. தன்னை புறக்கணிக்க நினைப்பவர்களின் அற்பமான செயல்களில் இதுவும் ஒன்று என்பதை ஜெயலலிதா நன்கு அறிந்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரின் இடத்தை தான் நிரப்ப வேண்டும் என்று முடிவெடுத்தார்.



1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. அன்று முதல் 21 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்தி தீவிர பிரச்சாரம் நடத்தினார். எம்.ஜி.ஆர். பற்றியும் அவர் செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் பேசினார். மக்களை நேரில் சந்தித்து, அவர்களது கருத்துக்களைக் கேட்றிந்தார். கேள்வி பதில் பிரச்சாரம் என்ற புதிய அணுகுமுறையை கையாண்டார். பிரச்சாரக் களத்திலேயே மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனால், அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பும் மரியாதையும் கிடைத்தது. இதுவரை தமிழக அரசியலில் நிகழ்ந்திராத பிரச்சாரமாக ஜெயலலிதாவின் பிரச்சாரம் அமைந்தது. தான் நினைத்தது போலவே எம்.ஜி.ஆரின் இடத்தை அவர் சமன் செய்தார்.

தேர்தல் நடந்து முடிவுகள் வந்த வெளியானபோது ஜெயலலிதாவின் உழைப்புக்கு சரியான பலன் கிடைத்தது. 153 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற தேர்தலிலும் 12 தொகுதிகளில் வென்றது.

மக்களை நேரடியாக சந்தித்து ஒவ்வொருவரிடம் உரையாடி, கேள்வி பதில் பிரச்சாரம் மூலம் புதுமையைப் புகுத்தி அபாரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னுதாரணமாக விளங்குபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அந்த வகையில், 2016ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தின் முன்னோடி ஜெயலலிதா தான் என்பதே உண்மை.

அடுத்த செய்தி