ஆப்நகரம்

சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்: கமல் காட்டம்

போலீஸ் காவலில் தந்தை, மகன் இறந்த சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Jun 2020, 1:44 am
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும், மகனும் போலீசில் காவலில் அடுதடுத்து உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
Samayam Tamil kamal


இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்" என்று தமது ட்விட்டர் பதிவில் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

போலீஸ் காவலில் தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் - தூத்துக்குடி சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!

சாத்தான்குளம், அரசரடி தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னீக்ஸ்(31). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 19 ஆம் தேதி கடையடைப்பது தொடர்பாக பென்னீக்ஸுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, பென்னீக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை போலீசார் கைது செய்தனர். இருவரையும் 21ஆம் தேதி கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பென்னீக்ஸிற்கு நேற்று (ஜூன் 23) மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து அவரை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு சப் ஜெயில் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கடுத்த சில மணி நேரத்தில் பென்னீக்ஸின் தந்தை ஜெயராஜும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அடுத்த செய்தி