ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு.. அப்போ உதயநிதி இப்போ கமல்ஹாசன்.. நன்றி தெரிவிக்கும் படலம்.!

கமல்ஹாசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Authored byமணிகண்டன் குருசாமி | Samayam Tamil 18 May 2023, 7:34 pm
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டில், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஜல்லிக்கட்டை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் இளைஞர்கள், பொதும்மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை முன்னெடுத்தனர். அதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அப்போதய அதிமுக அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தது.
Samayam Tamil kamal haasan
கமல்ஹாசன்


பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் மீண்டும் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், உச்சநீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி அதிமுக தலைவர்கள், பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக அமைச்சர்களும் அரசுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தமிழர்களின் வீரமிகு பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடை ஏதுமில்லை எனும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கும் - நம் பாரம்பரிய விளையாட்டுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசின் சட்டப்போராட்டமே இவ்வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும் இத்தீர்ப்பை வரவேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மநீம தலைவர் கமல்ஹாசனும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.

இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி’’ என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மணிகண்டன் குருசாமி
நான் மணிகண்டன் குருசாமி. ஊடகத்துறையில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். சர்வதேச அரசியல், கலை, சினிமா, உயர்கல்வி, தேசிய அரசியல் குறித்து எழுதிய அனுபவம் உள்ளது. புலனாய்வு செய்திகள் எனது விருப்பத்திற்குரியவை. திரைமறைவு அரசியலை ஆழமாக படித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி