ஆப்நகரம்

விஜயகாந்தை களத்தில் இழுக்கும் கமல், மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்...

தேமுதிக தலைவர் விஜயாகாந்த் பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Aug 2020, 6:29 pm
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் கட்சி தலைமை வரை அதற்கான வேலைப்பாடுகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுக பிரமுகர்கள் தவறாமல் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டனர்.
Samayam Tamil file pic


அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். கமல் ட்வீட், '' தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே'' என பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுமட்டுமல்லாமல், மக்கள் பணியை ஆற்ற அரசியல் களத்திற்கு வாருங்கள் என அவர் குறிப்பிட்டிருப்பது தேமுதிக தொண்டர்களுக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியை அளித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதையே தேமுதிக தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் இன்று கூறியிருந்தார்.


விருத்தாசலம் எம்எல்ஏ முதல் எதிர்க்கட்சித் தலைவர் வரை... விஜயகாந்தின் அரசியல் பயணம்!!

நாடாளுமன்ற தேர்தலில் இருந்து இன்றுவரை அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக இப்படியான கருத்தை முன்வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைக்காத பட்சத்தில் மக்கள் நீதி மய்யத்துடன் கைகோர்த்து சட்டசபை தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அப்படி நடந்தால் அது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு சாதகமான சூழலாக அமையும்.

அடுத்த செய்தி