ஆப்நகரம்

கந்த சஷ்டி: தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 15) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

Samayam Tamil 15 Nov 2020, 9:26 am
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
Samayam Tamil thiruchendur murugan


ஒன்றாம் திருநாள் முதல் ஐந்தாம் திருநாள் வரையிலும் மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, சுவாமி-அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 6ஆம் திருநாளான வருகிற 20ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. காலையில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருள்வார்.

சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை: பக்தர்கள் கவனிக்க வேண்டியவை!

அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

7ஆம் திருநாளான 21ஆம் தேதி (சனிக்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7ஆம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி கோயிலில் ஆபாச சர்ச்சை; பக்கா பிளான் ரெடி செஞ்ச சேனல்!

மேலும் கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்க, விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் யூ டியூப் தளத்தில் நேரலையாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி