ஆப்நகரம்

இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா: தயாரான கர்நாடக அரசு!

சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் கர்நாடக உள்துறை மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 17 Dec 2020, 11:28 am
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று விடுதலையாவார் என்றும், அபராதத் தொகையை செலுத்தவில்லை என்றால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil சசிகலா
சசிகலா


ஆனால், சசிகலாவின் அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி அவர் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதால், அவரது விடுதலை உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் அவரை அழைத்து செல்ல ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வளாகத்தில் கூட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலையும் வெள்ளை கொடி காட்டும் தினகரனும்: என்ன நடக்கிறது அமமுகவில்?

இதனை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் சசிகலாவின் தொண்டர்கள், அவர்களது வாகனங்களை சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலாவுக்கு அமைச்சர் பதவி? என்ன சொல்கிறார் கமல்ஹாசன்!

அதேபோல், சசிகலாவை கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வரை உரிய பாதுகாப்புடன் அழைத்து சென்று அங்கு அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனத்தில் அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிகிறதா? ஸ்டாலின் போடும் கணக்கு!

உளவுத்துறையின் அறிக்கைப்படி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், விடுதலை செய்யப்படும் நாளன்று நிலவும் சூழலுக்கு ஏற்ப இதில் சில மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி