ஆப்நகரம்

சாத்தான்குளம் கஸ்டடி மரணம்; மாஜிஸ்டிரேட் தரப்பு அளித்த விளக்கம்- லேட்டஸ்ட் நிலவரம்!

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கோவில்பட்டி மாஜிஸ்ட்டிரேட் மேற்கொண்ட விசாரணை மற்றும் அறிக்கை பற்றி விரிவாக காணலாம்.

Samayam Tamil 1 Jul 2020, 11:41 am
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதன் விளைவாகவே உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரது உடல்களும் அதிகாரிகள் முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சாத்தான்குளத்தில் தங்கி சாட்சியங்கள் மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறையில் நேரடி விசாரணை நடத்த கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil Sathankulam Death


இந்த சூழலில் சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்திருந்தார். தனது விசாரணையின் முதல்கட்ட தகவலை அறிக்கையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாரதிதாசன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கடந்த 19ஆம் தேதியன்று சம்பவம் நடைபெற்ற போது பதிவான சிசிடிவி ஆதாரங்கள் அழிக்கப்பட்டது தெரியவந்தது.

சாத்தான் குளம் விவகாரம்: மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

அதனை தாமாகவே அழியும் வண்ணம் செட்டிங் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கறை படிந்த லத்திகளை ஒப்படைக்க சாத்தான்குளம் காவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ரத்தக் கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு சென்ற இடத்தில் அசாதாரண சூழலை சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் உருவாக்கியதால் விசாரணையை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியே வந்துவிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விடிய விடிய தந்தையும் மகனையும் காவலர்கள் லத்தியால் தாக்கியதாக பெண் காவலர் ஒருவர் தைரியமாக வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே சாத்தான்குளம் காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருமே தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் மரணத்துடன் குற்றநடைமுறைச் சட்டப்படி இனி துப்புத் துலக்க வேலையில்லை. இவர்கள் மரணத்திற்கு பொறுப்பான காவலர்கள் மீதும் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த நிமிடம் வரை எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

இந்த சூழலில் இருவரது மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால் தானே விசாரணையை வேறு முகமைக்கு மாற்ற முடியும் என்பது அடிப்படையான விஷயம். எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது விரைவாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

தந்தை -மகன் மரண வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு!!

இதற்கிடையில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சாத்தான்குளம் காவல்நிலையத்தை சிபிசிஐடி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. யாரும் நுழையாத வகையில் காவல்நிலைய வாசலின் குறுக்கே தடுப்பு அமைத்துள்ளது. தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி தனது விசாரணை தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி