ஆப்நகரம்

முதல்வர் அப்படி செஞ்சுருக்க கூடாது: அதிருப்தியை வெளிப்படுத்திய அழகிரி

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணித்திருக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Samayam Tamil 28 May 2022, 6:55 am
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன் தினம் சென்னை வந்தார். அந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
Samayam Tamil KS Alagiri


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் சென்னையில் சில திட்டங்களை தொடங்கி வைத்தார். ஏற்கனவே தொடங்கி வைத்த திட்டங்களை மீண்டும் தொடங்கி வைத்த ஒரே பிரதமர் மோடிதான். சென்னை துறைமுகம்- மதுரவாயல் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீண்டும் தொடக்க விழா என்பது ஏற்புடையது அல்ல. எண்ணூரில் எரிவாயு முனையம் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் பெருத்தன்மையுடன் சென்றுள்ளார். ஆனால் பிரதமர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க கூடாது. பிரதமரின் சுற்றுப்பயணத்தை தெலுங்கானா முதலமைச்சர் புறக்கணித்தார். பிரதமர் வந்தால் வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாமல் அரசு மேடைகளில் அரசியல் செய்கிறார் என்பதால் தெலுங்கானாவில் புறக்கணிக்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் விழாவில் கலந்து கொண்டது துர்திஷ்டவசமானது” என்று கூறினார்.

ஜெயக்குமாருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்: எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்!

அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கூறிய அவர், “பெட்ரோல், டீசல் விலையை மோடி குறைக்காமல் நீண்ட காலமாக இருந்தார். ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் உடனடியாக பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தார். பாஜக செய்யும் அரசியல் பொதுமக்களிடம் எடுபடாது. ஒரு மாநிலத்திற்கு என்ன வேண்டும் என முதலமைச்சர் சொல்வது எப்படி நாடகம் ஆகும். மாநிலத்தின் தேவையை கேட்ட முதலமைச்சருக்கு அருகதை, உரிமை இல்லையா? தேவைகளை கேட்டதை தவறு என்று சொல்வதில் அவர்களின் அடிமை உணர்வு தெரிகிறது. எங்களை போலவே அடிமை உணர்வுடன் இருங்கள் என்று கூறுகின்றனர். பாஜக தலைவரின் கருத்து தவறானது. முதலமைச்சர் தவறாகவோ ஒழுக்க குறைவாகவோ பேசவில்லை.

மத்திய அரசுக்கு மாநில அரசு பாக்கி வைத்திருந்தால் தவறில்லை. ஆனால் தர வேண்டியதை தராமல் இருப்பது தான் தவறு. சேர வேண்டிய திட்டங்கள் சேரவில்லை என்பது தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு. அண்ணாமலை முழங்காலுக்கும் உச்சதலைக்கும் முடிச்சு போடுவது தவறு” என கூறினார்.

மேலும் அவர் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். “தமிழ்நாடு கல்வி கொள்கை மிகசிறந்தது. மத்திய கல்வி கொள்கை முலம் மீண்டும் குருகுல வாழ்க்கைக்கு கொண்டு செல்ல பார்க்கிறார்கள். இது உயர்ந்தவர் தாழ்ந்தவரை உருவாக்கும். மாநில கல்வி தான் சிறந்தது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது” என்றார்.

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் அது குறித்தும் தனது கருத்தை அழகிரி பேசினார். “கச்சத்தீவு நீண்ட பிரச்சனை. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவிற்கும் இடையே பிரச்சனை வந்த போது சிறிய அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை, நேபாளம், வங்காள தேசம் போன்ற நாடுகளுடன் இந்திரா காந்தி நெருக்கமாக உறவை வைத்து இருந்தார். அப்போது இலங்கையிடம் கச்சத்தீவு தந்த போது தமிழக மீனவர்கள் வலையை காய வைத்து கொள்ளலாம். மீன்பிடித்து செல்லும் போது தங்கி கொள்ளலாம் என்ற உடன்பாட்டுடன் செய்யப்பட்டது. ஆனால் இலங்கை நம்முடன் இல்லை. இலங்கை சீனாவுடன் உள்ளது. இலங்கைக்கு உதவி செய்யும் அளவிற்கு தமிழகம் வளர்ந்திருக்கிறது. இந்த நேரத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

அடுத்த செய்தி