ஆப்நகரம்

ஊரடங்கு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை!

பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்

Samayam Tamil 27 May 2020, 5:59 pm
கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் அதன்பின்னர் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, கைவிடுவதா, சில இடங்களைத் தவிர்த்து பல இடங்களில் தளர்வுகளை ஏற்படுத்துவதா என மாநில அரசுகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தை பொறுத்தவரை பொது முடக்கம் நீட்டிப்பு, தளர்வு குறித்து எப்போது அறிவித்தாலும், அதற்கு முன்னதாக ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழு, மாவட்ட ஆட்சியர்கள், கொரோனா சிறப்பு பணிக் குழு ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வார்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுப்பது, கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவது, பொது முடக்கத்தை நீட்டிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான்காவது முறையாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதலாம் - மத்திய அரசு

அதன் முடிவில், தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக வருகிற 30ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், சென்னைக்கு பொதுமுடக்கத்தில் தளர்வு அளிக்கக்கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பொது முடக்கத்தை நீட்டிப்பது, கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கானொளிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 29ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வருகிற 31ஆம் தேதியுடன் 4ஆவது பொதுமுடக்கம் முடிய உள்ள நிலையில் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி