ஆப்நகரம்

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Authored bySM Prabu | Samayam Tamil 6 Dec 2022, 6:02 pm
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரியும், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு மூலம் மின்னணு முறையில் நடத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
Samayam Tamil தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்


இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மருத்துவ கவுன்சிலின் வாக்காளர் பட்டியல் வெளியிடாமல் தேர்தல் நடத்தப்படுவதாகவும், தேர்தல் நியாயமாக நடத்த ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்த வகை செய்யும் 1914ஆம் ஆண்டு சென்னை மருத்துவப் பதிவு சட்டத்தில், ஆந்திரா மற்றும் சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர்களும், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவர்கள் பிரதிநிதிகளாக நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, சென்னை மாகாணம் மொழி வாரியாக பிரிக்கப்பட்ட பின், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆந்திரா பல்கலைக்கழக செனட் உறுப்பினரையும், விசாகப்பட்டின மருத்துவ கல்லூரி மருத்துவரை எப்படி நியமிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த சட்டமும், விதிகளும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்தப்படும் என்றார்.

எடப்பாடியுடன் கூட்டணி? காலத்தின் கட்டாயம் - டிடிவி தினகரன் தகவல்!
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மனுதாரர்கள் சட்டம் குறித்து கேள்வி எழுப்பவில்லை எனக் கூறினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் மூன்று மாதங்களில் முழுமையாக திருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்தும் விதிகளை வகுக்கவும் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி