ஆப்நகரம்

தமிழகப் பள்ளிகள் திறப்பு; உயர் நீதிமன்றம் காட்டிய அதிரடி - முன்வருமா அரசு?

அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து காணலாம்.

Samayam Tamil 22 Jan 2021, 12:41 pm
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் பொதுத்தேர்விற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே 24 மணி நேரமும் முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது.
Samayam Tamil tn school reopen


இதன்மூலம் 22.3 சதவீத மாணவ, மாணவிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், தூக்கமின்மை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு ஆளாகி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே 50 சதவீத மாணவர்களுடன் இரண்டு அமர்வுகளாக தலா மூன்று மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

எடப்பாடி முதல்வரானது இறைவனாலா, சசிகலாவாலா? -திமுக தயாநிதி கேள்வி!
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிகள் திறப்பு குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு தான். இதுதொடர்பாக எந்த அழுத்தமும் இல்லாமல் அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் பொதுமக்களிடையே நம்பிக்கை பிறந்துள்ளது.

எனவே அடுத்த 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் மனுதாரர் புதிதாக ஒரு வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டப் பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது.

சின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 22) திரைப்படங்கள்!
இதேபோன்ற நிலை மற்ற பள்ளிகளிலும் ஏற்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் இது தேர்தல் காலம் என்பதால் ஒவ்வொரு முடிவையும் அரசு மிகவும் கவனமாக எடுக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.

அடுத்த செய்தி