ஆப்நகரம்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 28 Sep 2022, 5:03 pm
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்


தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்து விட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் திருமாவளவன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், தனி நீதிபதி உத்தரவை திரும்ப பெற கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், மேல் முறையீடுதான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

சசிகலாவுடன் எப்போது சந்திப்பு? ஓபிஎஸ் ஹிண்ட்!
இந்த முறையிட்ட கேட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்தது.

உணவு இடைவேளைக்கு முன் இதுகுறித்து விளக்கம் அளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அது விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் விளக்கம் அளித்தனர்.

அடுத்த செய்தி