ஆப்நகரம்

Sedition Case: வைகோ மீதான ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகையை நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 3:50 pm
தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை மேல்முறையீட்டு விசாரணை நிறைவடையும் வரை நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Vaiko at Party.


கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மை்ககு எதிராக பேசியதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 5ம் தேதி தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம் வைகோ ஒரு குற்றவாளி. அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதத் தொகையும் விதிப்பதாக உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக வைகோ தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு மேல்முறையீடு செய்ய சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வைகோவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இனிமேல் பொது வெளிகளில் இதுபோன்று பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மேல்முறையீடு குறித்து சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இனிமேல் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசாதீர்கள் என்று அறிவுறை வழங்கிய உயர்நீதிமன்றம், தேசதுரோக வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை நிறைவடையும் வரையில் அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி