ஆப்நகரம்

கொல்லப்படும் யானைகள்.. சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்கில் சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

Samayam Tamil 12 Jan 2022, 11:18 pm
யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ எஸ்.பி.யை காணொலி காட்சி விசாரணையில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil elephant


தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

போதைப் பொருள் கடத்தல்.. ரஷ்யாவை சேர்ந்தவருக்கு ஜெயில்!
அப்போது, ரயிலில் யானைகள் அடிபட்டு இறப்பதை தடுப்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் இந்த வாரம் ஆலோசனை நடத்த இருப்பதால், இது சம்பந்தமாக அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டும், விசாரணையில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையில் உள்ள தாமதம் குறித்து காணொலி காட்சி விசாரணையில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி சிபிஐ எஸ்.பி-க்கு உத்தரவிட்டனர்.

யானைகளை வேட்டையாடி திருடப்பட்ட ஒரு தந்தத்தை கூட பறிமுதல் செய்ய முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றமே சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து, யானைகள் வேட்டை தொடர்பான வழக்குகளின் விசாரணையை மாற்ற வேண்டி வரும் எனவும் எச்சரித்தனர்.

சிபிஐ தரப்பில் ஆஜரான மதுரை கிளை உதவி சொலிசிட்டர் ஜெனரல், இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ அதிகாரிகளை அறிவுறுத்துவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அடுத்த செய்தி