ஆப்நகரம்

மைதா, ரவை, கோதுமை வாங்கிவிட்டு ரூ.7 லட்சம் பணம் தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு!

ரூ.7 லட்சத்து 29 ஆயிரத்துக்கு மைதா, ரவை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி விட்டு பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றிய மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 15 May 2019, 10:18 am
ரூ.7 லட்சத்து 29 ஆயிரத்துக்கு மைதா, ரவை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி விட்டு பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றிய மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil Court.


மதுரை வாடிப்பட்டி தாலுகா சித்தாலங்குடியை சேர்ந்தவர் மகாராஜன். இவர் மதுரை மாவட்ட 4வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை சித்தாலங்குடியில் உள்ள தனியார் உணவு பொருள் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளேன். எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மைதா, ரவை, கோதுமை மற்றும் தவிடு ஆகியவற்றை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறோம். தனக்கன்குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற வியாபாரி, எங்கள் நிறுவன பொருட்களை கொள்முதல் செய்து வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.7 லட்சத்து 29 ஆயிரத்துக்கு பொருட்கள் கொள்முதல் செய்தார். ஆனால் அந்த பணத்தை தராமல் வேல்முருகன் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து திருநகர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் எங்கள் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வேல்முருகன் மீது வழக்குபதிவு செய்து, எங்கள் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுத்தர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கவுதமன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் புகார் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க திருநகர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி