ஆப்நகரம்

காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கில், துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 23 Apr 2019, 11:20 pm
மதுரை புதூரை சேர்ந்த ஜேசுராஜா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Samayam Tamil Madurai Kamaraj Univ


மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள், இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இதன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஓ.ரவி என்பவர் உள்ளார். இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் இவரை இந்த பணியில் நியமித்ததற்கு எதிராக தடை பெறப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த ஒப்புதலும் இன்றி, அந்த பணியில் தொடர்ந்து வருகிறார். எனவே இவருக்கு பதிலாக புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கும், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, வழக்கு குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி