ஆப்நகரம்

சென்னை சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த திருமணம்!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்திலேயே மணமகன் ஷாகின்ஷா, மணமகள் சுமயா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்

Samayam Tamil 17 Feb 2020, 3:36 pm
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திருமண வைபவம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சி.ஏ.ஏ. போராட்டத்தில் திருமணம்
சி.ஏ.ஏ. போராட்டத்தில் திருமணம்


குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் மாணவர்களின் போராட்டம் கவனம் ஈர்த்த நிலையில், ஷாகீன்பாக்கில் பெண்கள் முன்னெடுத்துள்ள அமைதியான போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

அதற்கு இணையாக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து, போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சிஏஏ குறித்து விவாதம் நடத்த வாய்ப்பில்லை: வெடிக்குமா போராட்டம்?

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டம் 4ஆவது நாளாக நீடித்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். அதேசமயம், சட்டப் பேரவையில் குடியுரிமைச் சட்டத் திருத்ததுக்கு எதிராக விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

டெல்லியாக மாறும் தமிழகம்; காவல்துறை தலைவர் அதிரடி உத்தரவு!

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திருமண வைபவம் ஒன்று நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மணமகன் ஷாகின்ஷா, மணமகள் சுமயா ஆகிய இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இருவீட்டார் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டிருப்பதால், அவர்களது திருமணத்தை போராட்டக் களத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி அவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. மணமக்கள் இருவரும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்து கொண்டி அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்த செய்தி