ஆப்நகரம்

இந்த ஆண்டிலேயே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

இந்த ஆண்டிலேயே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Oct 2020, 11:25 pm

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Samayam Tamil அமைச்சர் ஜெயக்குமார்


மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்..! உருவானது புதிய சட்டம்

இந்த சந்திப்புக்கு பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக ஆளுநரை தமிழக அரசின் சார்பில் முதல்வர் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இந்த ஆண்டிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக வேண்டும். இதற்காக இந்த கல்வி ஆண்டிலேயே 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. விரைவில் கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்படும். அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் அதிகளவிலான மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1947 முதல் 2011 வரை 1,947 மருத்துவ இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. 2011 முதல் 2017 வரை 1,110 இடங்கள் உருவாக்கப்பட்டன. 2017 முதல் 2019 வரை 290 இடங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகபட்சமாக 3,050 மருத்துவ இடங்கள் உருவாக்கபட்டுள்ளன. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சியின் விளைவாக 1,940 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

7.5% உள் ஒதுக்கீடு கொண்டுவந்தது முழுக்க முழுக்க அதிமுக அரசுதான். இதில் திமுக எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது. உள் ஒதுக்கீட்டுக்காக சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் கொண்டுவந்ததா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி