ஆப்நகரம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டாலின் வலியுறுத்தல்

விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

TNN 4 Jun 2016, 3:02 pm
சென்னை: விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil mk stalin urges proactively take action to prevent accidents
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டாலின் வலியுறுத்தல்


கிருஷ்ணகிரி அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 17 பேர் பரிதாபமாக இறந்ததும், 35 பேர் படுகாயமடைந்ததும் பெரும் வேதனையை அளிக்கிறது.

நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இதுபோன்ற விபத்துகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக இருப்பது கவலைக்குரிய ஒன்று.

வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமும் பொறுப்பும் தேவைப்படுகிறது. கவனம் சிதறி, பொறுப்புத் தவறும்போது அப்பாவி பயணிகளின் உயிர் பறிபோகிறது. அதே வேளையில், சாலை விபத்துகளைத் தடுக்கின்ற வகையில் அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வேலை பறிக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுவதுடன், நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றுவதில் பிடிவாதம் காட்டாமல் செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் வருமானத்தைவிட மனித உயிர் என்பது மிகவும் மேலானது. அவற்றைக் காப்பதுதான் அரசின் முதல் கடமை. மனித உயிர்கள் பறிபோவதற்கு அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோகக்கூடாது.

நெடுஞ்சாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி, வாகனங்களின் தரத்தை சோதனையிட்டு, வேகக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்கச் செய்து, விபத்துகளைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி