ஆப்நகரம்

காதுள்ள மனிதர்கள் பூமியில் பிறக்கும் வரை இளையராஜா இருந்து கொண்டே இருப்பார் - சீமான்

நாம் தமிழர் சீமான் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 2 Jun 2023, 6:02 pm
உலக புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரான இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அவரவர் தங்களுக்கு பிடித்த இளையராஜாவின் பாடல்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
Samayam Tamil seeman


வலைத்தளம் முழுவதும் இன்று இளையராஜாவின் பாடல்களும் அவரது வளர்ச்சியை குறித்துதான் பேசப்பட்டு வருகிறது. வாட்சப் ஸ்டேட்டஸ் தொடங்கி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக பக்கங்களில் அவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கே சென்று பாராட்டினார். பல தலைவர்கள் டிவிட்டரில் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட்டியுள்ளார். சீமானின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர் புதிதாக தொடங்கியுள்ள பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்,

பண்ணைபுரம் தந்த பைந்தமிழ்ப் பாட்டிசை மேதை.. காலத்தைக் கடந்து நிற்கும் காவியப் பாடல்களை உயிர்ப்பிக்கும் தங்கத் தமிழிசையின் தாயகம்! உலகம் தழுவி தமிழினத்தின் முகவரியைத் தனது தேனிசைக் கரங்களால், தன் ராக வரிகளால் பொறித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன்.

ஒவ்வொரு தமிழனின் உள்ளும் புறமும் நிரம்பி வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ததும்பி கொண்டே இருக்கும் வற்றாத இசை ஊற்று. உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் மண் மணம் மாறாத தன் இசையால் தமிழர்களின் நினைவுகளை மீட்டி, தாய்நிலத்தின் கனவுகளை ஊட்டி ஆற்றுப்படுத்தும் அன்னைத் தமிழின் இசைக் கருவறை.

தரணியில் எம் தமிழ் தங்கும் வரை, உலவுகின்ற காற்று இந்த உலகத்தில் உள்ளவரை, காதுள்ள மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கும் வரை. எம் மண்ணின் ஈடு இணையற்ற இசைக் கலைஞன் இசைஞானி இளையராஜா இருந்து கொண்டே இருப்பார்.

தமிழர்களின் இசை அடையாளம். எல்லைகள் அற்ற இசைமேதை இளையராஜா பிறந்த நாளில் ஐயாவை வாழ்த்தி வணங்குவதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்' என வாழ்த்து கூறியுள்ளார் சீமான்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி